புதுச்சேரியில் போட்டி அதிகமுள்ள அரசுப் பள்ளிகளில் 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு நடத்த அரசுக்கு கல்வித்துறை பரிந்துரைத்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் தனிக் கல்வி வாரியம் இல்லாததால் புதுவை, காரைக்கால் பிராந்தியங்கள் தமிழகப் பாடத்திட்டத்தையும், மாஹே கேரளா, ஏனாம் ஆந்திரா பாடத்திட்டத்தையும் பின்பற்றுகின்றன.
கரோனா பரவலால் தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்பட்டனர். இதைப் பின்பற்றி புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்பட்டனர். இதனால் பிளஸ் 1 மாணவர் சேர்க்கையை எதன் அடிப்படையில் நடத்துவது எனப் பெரும் குழப்பம் நிலவுகிறது.
அரசுப் பள்ளிகளில் 1 முதல் 9-ம் வகுப்பு மற்றும் பிளஸ்1 மாணவர் சேர்க்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடு தலைமையில் காணொலியில் இன்று நடந்தது. கூட்டத்தில் இணை, துணை இயக்குனர்கள், முதன்மைக் கல்வி அதிகாரிகள், பள்ளிக் கல்வி ஆய்வாளர்கள், முதல்வர்கள், துணை முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் மாணவர் சேர்க்கை தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாகக் கல்வித்துறை உயர் அதிகாரிகள் கூறுகையில், "1 முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர்களைப் பள்ளியில் சேர்ப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் ஒரு வாரத்தில் வெளியிடப்படும். இதன்படி மாணவர் சேர்க்கை நடத்தப்படும். போட்டி அதிகம் உள்ள பள்ளிகளில் நுழைவுத் தேர்வு அடிப்படையில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கையை நடத்த அரசுக்குக் கல்வித்துறை பரிந்துரைத்துள்ளது. அரசு கொள்கை முடிவு எடுத்து அறிவித்தபின், அதன்படி மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்.
மாணவர்களின் மதிய உணவுக்கான தொகையை கரோனா விதிகளைப் பின்பற்றி, பாதுகாப்பாக வழங்க வேண்டும். ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் உட்படப் பல திட்டங்களில் கிடைத்த நிதியால் பள்ளிகளுக்குத் தேவையான கட்டமைப்பை 3 மாதங்களில் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல முடிவுகள் எடுக்கப்பட்டன" என்று தெரிவித்தனர்.
No comments:
Post a Comment