பெற்றோர் அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் மத்திய அரசு ஊழியர்கள் 15 நாட்கள் சிறப்பு விடுமுறை எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு பணியாளர்கள் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் இருந்தாலோ, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலோ அவர்களுக்கு 20 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது.
மருத்துவமனையில் 20 நாட்களுக்கு மேல் தங்க நேர்ந்தால், அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்து, விடுமுறையை நீட்டித்துக் கொள்ள அனுமதி உள்ளது.
இந்நிலையில் பெற்றோர் அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் , 15 நாட்கள் சிறப்பு விடுமுறை எடுத்துக் கொள்ள ஊழியர்கள் தகுதி பெறுகின்றனர் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடியாக தொடர்பில் இருந்தால் அவர்கள் ஏழு நாட்களுக்கு வீட்டில் இருந்தபடி பணி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.
கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள், அந்த அறிவிப்பு விலக்கிக் கொள்ளப்படும் வரை, வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதிக்கப் படுகின்றனர்.மறு உத்தரவு வரும் வரை, இவை அமலில் இருக்கும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
No comments:
Post a Comment