பிளஸ் 2 தேர்வு ரத்து: இடைக்காலத் தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்ட உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று கூறிய சென்னை உயர் நீதிமன்றம், இதில் தலையிட முடியாது என மறுத்துவிட்டது.

கரோனா இரண்டாவது அலை பரவி வருவதைக் கருத்தில்கொண்டு ஜூன் 1-ம் தேதி சிபிஎஸ்இ 12-ம் வகுப்புத் தேர்வை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. தொடர்ந்து தமிழக அரசும் ஜூன் 5-ம் தேதி அன்று 12-ம் வகுப்புத் தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து மதிப்பெண்கள் வழங்க உரிய வழிமுறைகளை வெளியிடக் குழு ஒன்றை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் 12-ம் வகுப்புத் தேர்வை ரத்து செய்ததை எதிர்த்து ராம்குமார் ஆதித்தன் என்ற வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:

''கடந்த ஆண்டு கரோனா முதலாவது அலையினால் 11-ம் வகுப்பு இறுதித் தேர்வு எழுதாமல், தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட மாணவ, மாணவிகள்தான் தற்போது 12-ம் வகுப்புப் பயின்று வருகின்றனர். மாநில அரசின் பாடத்திட்டத்தைப் பின்பற்றி அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் அரசு பாடத்திட்டத்தை ஆங்கில வழியில் பயிற்றுவிக்கும் தனியார் பள்ளிகள் உள்ளன.

இதில் 2020 - 2021ஆம் கல்வியாண்டில் 90 சதவீத அரசுப் பள்ளிகளிலும் 80% அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளிலும், 50% ஆங்கில வழி தனியார் பள்ளிகளிலும் இணையவழிக் கல்வி வகுப்புகள், காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகள் நடைபெறவில்லை. ஆனால் சிபிஎஸ்இ மற்றும் சிஐஎஸ்சிஇ பாடத்திட்டத்தில் பயிற்றுவிக்கும் 90% பள்ளிகளில் இணையவழிக் கல்வி வகுப்புகள், காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகள் நடைபெற்றுள்ளன.

கடந்த ஆண்டு ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது சிபிஎஸ்இ, சிஐஎஸ்சிஇ மற்றும் அனைத்து மாநிலக் கல்வி வாரியங்களும் 12-ம் வகுப்புத் தேர்வுகளை நடத்தி முடித்திருந்தன. அதனால் அனைத்து வகையான மேற்படிப்புகளுக்கும் அவர்களின் பள்ளி இறுதித் தேர்வின் அடிப்படையில்தான் சேர்க்கை நடைபெற்றது.
தற்போது பெரும்பாலான பள்ளிகளில் வகுப்புகள் முழுமையாக நடைபெறாத சூழலில், மேற்படிப்பு வகுப்புகளின் கல்வி சேர்க்கைத் தகுதியை நிர்ணயம் செய்து உயர்கல்வி நிறுவனங்களை நெறிப்படுத்தும் யுஜிசி, மெடிக்கல் கவுன்சில், ஏஐசிடிஇ, நர்சிங் கவுன்சில், டென்ட்டல் கவுன்சில், பார் கவுன்சில் உடன் கலந்து முடிவு எடுக்காமல், தமிழ்நாடு அரசின் கல்வித் துறை 12-ம் வகுப்பு இறுதித் தேர்வை ரத்து செய்தது தவறு.

கேரளா, பிஹார், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் ஏற்கெனவே 12-ம் வகுப்புத் தேர்வு முடிந்துவிட்டது. அசாம் மாநிலம் ஜூலை மாதம் தேர்வு நடக்கும் என்று அறிவித்துள்ளது. இந்தச் சூழலில் பொதுத் தேர்வைத் தமிழகம் ரத்து செய்தது, முறையாகப் பயின்ற மாணவர்களின் உழைப்பை உதாசீனப்படுத்தும்.

கரோனா பரவல் குறைந்துவரும் சூழலில் இன்னும் ஓரிரு மாதங்கள் பொறுத்துத் தேர்வை நடத்தியிருக்கலாம். ஏற்கெனவே நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. கடந்த கல்வியாண்டான 2020- 2021இல் தமிழ்நாடு சட்டக்கல்லூரி சேர்க்கை ஜனவரி 2021 வரையிலும், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பிப்ரவரி 2021 வரையிலும், மருத்துவப் படிப்பு மற்றும் ஜேஇஇ சேர்க்கை இந்தியா முழுவதும் நவம்பர் 2020 வரையிலும் தள்ளிவைக்கப்பட்டது.

எனவே தமிழக அரசு உடனடியாகக் கல்வியாளர்களைக் கொண்டு ஒரு குழு அமைத்து, உயர்கல்வியை நெறிப்படுத்தி வரும் யுஜிசி, மெடிக்கல், டென்ட்டல், நர்சிங் கவுன்சில், ஏஐசிடிஇ மற்றும் பார் கவுன்சில் ஆகியவற்றுடன் கலந்து ஆலோசித்து , 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வை ரத்து செய்யாமல் சிறப்பு வகுப்புகள் நடத்தவும், ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்குப் பிறகு தேர்வுகளை நடத்தவும் உத்தரவிட வேண்டும்''.

இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், வழக்கு விசாரணையை நாளைய தினத்துக்கு ஒத்தி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதிகள் நாளை ஒத்தி வைத்திருந்தனர். இந்த நிலையில் அனைத்து வழக்குகளும் முடியும் தறுவாயில், மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கை விசாரிக்க வேண்டும் கேட்டுக்கொண்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதில் இடைக்காலத் தடை விதிக்க எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்றும், தேர்வு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் உயர் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்துத் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment