இன்று பல ஆண்கள் பெரிய தொப்பையுடன், உயரத்திற்கு ஏற்ற உடல் எடையுடன் இல்லாமல் இருக்கின்றனர். இப்படி ஆண்களுக்கு தொப்பை வருவதற்கு பின் பல காரணங்கள் உள்ளன. ஆண்களின் உடல் பருமன் அதிகரிப்பதற்கு உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம், ஹார்மோன் பிரச்சனைகள் மற்றும் மோசமான டயட் போன்றவை காரணங்களாக உள்ளன.
அதிலும் தற்போதைய காலங்களில் ஆண்கள் தான் அதிகமாக மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் வேலைப்பளுவின் காரணமாக அவர்களுக்கு உடற்பயிற்சி செய்வதற்கு நேரம் கிடைக்காமல் போகிறது. இதன் விளைவாக மிகவும் ஆபத்தான மற்றும் பல நோய்களுக்கு வழிவகுக்கக்கூடிய அடிவயிற்று கொழுப்புத் தேக்கத்தால் தொப்பையைப் பெறுகின்றனர்.
மேலும் பெண்களை விட ஆண்கள் தான் பானைப் போன்று பெரிய தொப்பையைக் கொண்டிருக்கின்றனர்.
அந்த தொப்பையைக் குறைக்க முயலாவிட்டால், அதன் விளைவாக பல தீவிர ஆரோக்கிய பிரச்சனையால் அவஸ்தைப்படக்கூடும். சரி, இப்போது ஏன் ஆண்கள் அவசியம் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்பதற்கான காரணங்களைக் காண்போம்.
ஆரோக்கியமான மற்றும் நோயில்லாத வாழ்க்கையை வாழ வேண்டுமானால் ஆண்களுக்கு எடை இழப்பு என்பது மிகவும் முக்கியம். உடல் பருமன் ஒருவரது தோற்றத்தை மட்டும் பாதிப்பதில்லை, பல்வேறு உயிரைப் பறிக்கும் நோய்களுக்கும் தான் வழிவகுக்கும். இங்கு ஆண்கள் எடையைக் குறைக்காமல் தொப்பையுடன் இருந்தால் சந்திக்க வேண்டிய ஆரோக்கிய பிரச்சனைகள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளது.
உடல் பருமன் உள்ள பல ஆண்களும் அவஸ்தைப்படும் ஓர் பிரச்சனை தான் உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சனைகள். இந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுடன் இல்லாவிட்டால், அது மிகவும் ஆபத்தான பல இதய நோய்களுக்கு வழிவகுத்துவிடும்.
வேகமான இதய துடிப்பு மற்றும் மாரடைப்பு போன்றவற்றால் தான் தொப்பை உள்ள பல ஆண்கள் மரணத்தை சந்திக்கின்றனர். மன அழுத்தத்துடன் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையுடன் வாழ்ந்து வந்தால், அதனால் திடீரென்று மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
உடல் பருமனுடன், பெரிய தொப்பை கொண்ட ஆண்கள் பலர் அதிகம் பாதிக்கப்படும் ஓர் கொடிய நோய் தான் புற்றுநோய். குறிப்பாக உடல் பருமன் உள்ள ஆண்களை புரோஸ்டேட் மற்றும் குடல் புற்றுநோய் தான் தாக்குகின்றன.
சர்க்கரை நோய்
உயரத்திற்கு ஏற்ற உடல் எடையுடன் இல்லாமல் ஒருவர் இருந்தால், உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும். குறிப்பாக சர்க்கரை நோய் தாக்கக்கூடும். அதுவும் டைப்-2 சர்க்கரை நோயால் தான் பாதிக்கப்பட நேரிடும்.
கல்லீரல் பிரச்சனைகள்
ஆண்கள் உடல் எடையைக் குறைக்காமல் இருந்தால், கல்லீரல் பிரச்சனைகளான கல்லீரல் வீக்கம் அல்லது கொழுப்பு கல்லீரல் போன்றவற்றால் அதிகம் அவஸ்தைப்பட வேண்டியிருக்கும். அதுமட்டுமின்றி, நெஞ்செரிச்சல் அல்லது அதிக அமில சுரப்பு போன்றவற்றால் கஷ்டப்படக்கூடும்.
ஆர்த்ரிடிஸ்
உடல் பருமனுடன் இருக்கும் ஆண்கள் தசை மற்றும் மூட்டு பிரச்சனைகளுள், குறிப்பாக முழங்கால் பிரச்சனையால் பெரிதும் கஷ்டப்படுவார்கள். அதுவும் பல ஆண்கள் ஆர்த்ரிடிஸ் பிரச்சனையால் தான் அதிகம் அவஸ்தைப்படுவார்கள்.
இதர பிரச்சனைகள்
ஆண்கள் உடல் எடையைக் குறைக்காமல் தொப்பையுடன் இருந்தால், அதன் விளைவாக தூக்க கோளாறு, பித்தப்பை நோய் அல்லது பித்தக்கற்கள், கவனச் சிதறல் மற்றும் கற்பதில் சிரமம், மனநல பிரச்சனைகள் போன்றவற்றாலும் கஷ்டப்படக்கூடும்.
இப்போது ஆண்கள் உடல் எடையைக் குறைப்பதால் பெறும் நன்மைகள் என்னவென்று காண்போம்.
ஆரோக்கியமான இதயம்
உடல் பருமனுடன் இருந்தால், இதயத்திற்கு அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டு, பல்வேறு இதய பிரச்சனைகளை உண்டாக்கும். அதுவே உடல் பருமனைக் குறைத்தால், உயர் இரத்த அழுத்த அபாயம் குறைந்து, இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.
நல்ல கொலஸ்ட்ரால் அதிகரிக்கும்
உடல் எடையைக் குறைத்து, அன்றாடம் உடற்பயிற்சியை செய்து வந்தால், உடலில் நல்ல கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும். ஒருவரது உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் குறைந்து, நல்ல கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால், இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குறையும்.
சர்க்கரை நோயின் அபாயம் குறையும்
அதிகப்படியான உடல் எடையைக் குறைப்பதனால், இரத்த சர்க்கரை அளவு சீராக பராமரிக்கப்பட்டு, சர்க்கரை நோயின் அபாயம் குறையும்.
புற்றுநோய் அபாயம் குறையும்
உடல் எடையைக் குறைப்பதனால், புற்றுநோயின் அபாயம் குறையும். உடல் பருமனுடன் இருக்கும் ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் வருவது கண்டறியப்பட்டுள்ளது. அதேப் போல் உடல் பருமனுடன் இருக்கும் பெண்களுக்கு கருப்பை மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் வரும் அபாயம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment