தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் விரைவில் அறிவிப்பார் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசமி தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குட்டத்து ஆவாரம்பட்டியில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தை தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி இன்று குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, "சட்டமன்றத் தேர்தலின் போது திமுக சார்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும். இந்த அரசு உங்கள் அரசு மக்களுக்கான அரசு இதில் எந்த பாகுபாடும் இல்லை. கூட்டுறவு வங்கிகளில் கடன் கேட்டு வரக்கூடிய அனைவருக்கும் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நிலம் இல்லாதவர்களுக்கும் கடன் வழங்கப்படும். கூட்டுறவு வங்கியில் கால் வைக்காதவர்கள் கூட கடன் கேட்டு வந்தால் அவர்களுக்கு கண்டிப்பாக கடன் கொடுக்க வேண்டும் என வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் குளறுபடி நடந்தால் கண்டிப்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கடன் கேட்டு வருபவர்களிடம் மற்ற வங்கிகளிலிருந்து சான்றிதழ் வாங்கி வரவேண்டும் என்ற எந்த நிபந்தனையும் இல்லாமல் கடன் கொடுக்க வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த திமுக ஆட்சியின்போது முதியோர் உதவித் தொகை வழங்கப்பட்டவர்களுக்கு கடந்த அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது. அதனை மீண்டும் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசாங்க பணியில் சேர எந்த ஒரு லஞ்சமும் இல்லாமல் வெளிப்படைத் தன்மையோடு கண்டிப்பாக வேலை கொடுக்கின்ற ஆட்சிதான் தளபதி ஆட்சி. நிச்சயமாக தகுதி உள்ளவர்களுக்கு அரசாங்க வேலை கிடைக்கும். தமிழகத்தில் பால் மாடுகளை வளர்ப்பதற்கு ஒரு வருடத்திற்கு தேவையான தீவனத்திற்கான தொகையை அரசாங்கமே கொடுக்கின்ற திட்டம் விரைவில் தொடங்கப்படவுள்ளது" எனக் கூறினார்.
No comments:
Post a Comment