15 முதல் 18 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பு ஊசி.! வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தமிழக அரசு.!

15 வயது முதல் 18 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பு ஊசி செலுத்துவதற்கு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

நாளை முதல் 15 வயது முதல் 18 வயதுள்ள பிரிவினருக்கு கோவாக்சின் தடுப்பூசியும், 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு ஜனவரி 10-ம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை பிரதமர் மோடி கடந்த வாரம் வெளியிட்டார். 

ஓமிக்ரான் வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து, குழந்தைகள், முதியோர், இணைநோய்கள் இருப்போர், முன்களப்பணிாயளர்களைப் பாதுகாக்கும் நோக்கில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இந்நிலையில் 15 வயது முதல்‌ 18 வயதுடையோருக்கு நாளை முதல்‌ கொரோனோ தடுப்பூசி செலுத்துவதற்கான முன்னேற்பாடுகள்‌ செய்யப்பட்டு வரும்‌ நிலையில்‌ நேற்று முதல்‌ முன்பதிவை மத்திய அரசு தொடங்கியது.

தமிழகத்திலும் நாளை முதல் இந்த தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்க உள்ளது. அனைத்து மருத்துவ அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்கள் ஆகியோருக்கு தமிழ்நாடு சுகாதாரத்துறை கடிதம் வாயிலாக வழிகாட்டு நெறிமுறைகளை இன்று அனுப்பியுள்ளது. அதில், “2007ஆம் ஆண்டுக்கு முன், பிறந்தவர்கள் தடுப்பூசி போட தகுதியானவர்கள். அவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி மட்டுமே செலுத்த வேண்டும். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் ஆகியவற்றில் தகுதியான மாணவர்களை கணக்கெடுக்க வேண்டும். இதற்காக, ஆசிரியர் ஒருவரை பொறுப்பாளராக நியமித்து, கணக்கு எடுக்கும் பணிகளையும் ஒருங்கிணைக்கும் பணியும் மேற்கொள்ள வேண்டும்.

பள்ளி நிர்வாகத்தையும், சுகாதாரத் துறையையும் அந்த ஆசிரியர் ஒருங்கிணைத்து பள்ளிகளின் வாயிலாகவே முகாம்கள் அமைத்து தடுப்பூசியை மாணவர்களுக்கு செலுத்த நடவடிக்கை எடுக்கலாம். 15 – 18 வயது உடையவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு முன், கோவின் இணையத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். 

மேலும், அவர் ஆதார் அட்டை அல்லது 10 -ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அல்லது பள்ளியின் அடையாள அட்டை பயன்படுத்தி கொள்ளலாம். பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை மாவட்ட மருத்துவ அலுவலர் உறுதி செய்ய வேண்டும். 15 – 18 வயதுக்கு உள்பட்டவர்கள், நாளை போரூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதே நாளில் மாவட்ட சுகாதாரத்துறை பள்ளிகளில் தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment