தமிழர்களின் முக்கிய அடையாளம் அவர்களின் பாரம்பரியம் தான். இந்த பாரம்பரியத்தோடு உடல் நலத்தை பேணுவதிலும் அதிக அக்கறைக் கொண்டவர்கள் தான் நம் தமிழ் மக்கள். பொதுவாக ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு உணவு வகைளை படைத்தும் மகிழும் தமிழர்களின் பெருமையை அடுக்கிக்கொண்டே போகலாம். அதில் ஒன்று தான் தமிழர்களின் அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகையொட்டி அதிகளவில் கிடைக்கும் பனங்கிழங்கு. தமிழ்நாட்டின் மரமான பனைமரத்தில் விளையக்கூடிய பனம்பழம், பனங்கிழங்கு,பதநீர், நுங்கு, கருப்பட்டி உள்ளிட்ட அனைத்தும் பல்வேறு சத்துக்களைக் கொண்டுள்ளது. அதிலும் பனம்பழத்தில் உள்ள பனை விதைகளை மண்ணில் புதைத்த பின்னர் குறிப்பிட்ட நாள்கள் கழித்து தமிழர் பண்டிகையான பொங்கலை முன்னிட்டு அறுவடை செய்தால் கிடைக்கும் பனங்கிழங்கில் ஏராளமான மருத்துவக்குணங்கள் உள்ளது. அவை என்ன என்று இங்கே விரிவாகத் தெரிந்துக்கொள்வோம்…

பனங்கிழங்கில் உள்ள மருத்துவக்குணங்கள்:
சாப்பிடுவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், எப்போதும் சுறுசுறுப்பாக இயங்க வைப்பதுடன் உடலின் ஹோர்மோன் சுரப்பிகளையும் சரியாக இயங்க வைக்கிறது. மேலும் பனங்கிழங்கை சாப்பிடும் போது கண் எரிச்சல் மற்றும் வாய் புண் போன்றவற்றிக்கு தீர்வாக அமைகிறது.
மேலும் கற்பக விருட்சம் என்று அழைக்கப்படும் பனைமரம் அதிக காலம் உயிர் வாழும் அதிசயம் நிறைந்துள்ளது போல், அதில் கிடைக்கும் பொருள்களைச்சாப்பிட்டாலும் நோய் நொடியின்றி அதிக காலம் வாழ முடியும்.
பனங்கிழங்கில் அதிகளவு கிடைக்கும் நார்ச்சத்து செரிமான மண்டலத்தை சீராக்கி மலச்சிக்கலை சரி செய்ய உதவுகிறது.
மேலும் பனங்கிழங்கில் உள்ள இரும்புச்சத்து ரத்த சோகைக்கு தீர்வாகவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவியாக உள்ளது.
பனங்கிழங்கை வேக வைத்து சிறு,சிறு துண்டாக நறுக்கி காயவைத்த பின்பு, அதனுடன் கருப்பட்டி சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிட்டால் நம் உடலுக்குத் தேவையான அனைத்து இரும்புச் சத்துக்களும் நமக்கு கிடைக்கிறது.

இதேப்போன்று, பனங்கிழங்கு மாவில் தேங்காய்ப்பால் சேர்த்து சாப்பிட்டால் உடல் உறுப்புகள் வலுப்பெறும். மேலும் பெண்களுக்கு கர்ப்பப்பை பிரச்சனை ஏற்படாமலும் பாதுகாக்கவும் உறுதுணையாக உள்ளது.
வயிறு மற்றும் சிறுநீர் பாதிப்பு பிரச்சனை உள்ளவர்களாக நீங்கள் இருந்தால், பனங்கிழங்கை இடித்து வைத்து உணவில் சேர்த்துவந்தால் நல்ல பலனளிக்கும்.
மேலும் உடல் எடை அதிகமாக வேண்டும் என்று நினைப்பவர்கள் பனங்கிழங்கு சாப்பிடலாம்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் பனங்கிழங்கை சாப்பிட்டும் போது உடலின் இன்சுலின் அதிகரிக்கும் எனவும் இதனால் சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் எனக்கூறப்படுகிறது.
No comments:
Post a Comment