100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் ஊதியம் பெற, ஆதார் எண்ணை கொண்டு பணம் செலுத்தும் முறைகள் (ABPS -Aadhar Based Payment System) கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய ஊரக மேம்பாடு அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் / யூனியன் பிரதேசங்களுக்கும் ஜனவரி 30ம் தேதி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. அதில், "2023, பிப்ரவரி 1ம் தேதி முதல், 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் ஊதியம் பெற, ஆதார் எண்ணை கொண்டு பணம் செலுத்தும் முறைகள் (ABPS -Aadhar Based Payment System) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ABPS செய்யாதவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட மாட்டாது" என்று திட்டவட்டமாக அறிவித்தது. இருப்பினும், சில தொழில்நுட்பக் காரணங்களால் உடனடியாக ஆதார் எண் சமர்ப்பிக்க இயலாத பயனாளிகளுக்கு மார்ச் மாதம் இறுதி வரை மாற்று ஏற்பாடுகள் மூலம் ஊதியம் வழங்க மத்திய அரசு அறிவுறுத்தியிருந்ததது.
அதன்படி, 100 நாள் திட்டத்தில் பணியாற்றுவோருக்கான ஊதியம் இம்மாதம் இறுதிவரை, ஆதார் எண் அடிப்படையில் வங்கிக் கணக்கிலும், ஆதார் சமர்ப்பிக்க இயலாதவர்களுக்கு திட்ட அலுவலர் மூலகமாகவும் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, 100 நாள் திட்ட பணியாளர்கள் உடனடியாக ஆதாரை வங்கிக் கணக்குடன் இணைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
சமீபத்திய தரவுகளின்படி, தமிழ்நாட்டில் மட்டும் 42 லட்சத்துக்கும் அதிகமானோர் (42,88,339) ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்காமல் உள்ளனர். உத்தரபிரதேசம், பிகார், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 1 கோடிக்கும் அதிகமான பணியாளர்கள் AEPS முறையின் கீழ் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ABPS என்றால் என்ன? ABPS என்பது ஒரு வங்கி கணக்கை ஆதார் எண்ணுடன் இணைக்கும் செயல்முறையாகும். இதன் கீழ், ஒரு நபரின் 100 நாள் வேலை அட்டை, வங்கிக் கணக்கு மற்றும் ஆதார் எண் தொடர்புபடுத்தப்படும். இதற்கு, சம்பந்தப்பட்ட நபர், தனது வங்கிக்கு சென்று NPCI Mapping என்ற விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம், அந்த நபர் ஏற்கனவே பல வங்கி கணக்குகளை வைத்திருந்தாலும், எதிர்காலத்தில் கணக்குள் தொடங்கினாலும், 100 நாள் ஊதியம் ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கிற்கு நேரடியாக சென்றுவிடும். வரும் மார்ச் 31ம் தேதிக்குள், வங்கிக் கணக்கை ஆதார் எண்ணுடன் இணைத்து, இணைக்கப்பட்ட வங்கிக் கிளை அலுவலத்துக்குச் சென்று NPCI Mapping விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்யுங்கள். அவ்வாறு, செய்யாதவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட மாட்டாது என்றும் கூறப்படுகிறது
No comments:
Post a Comment