பட்டதாரி ஆசிரியர்களுக்கான கட்டாய இடமாறுதல் நிறுத்தம்

தினமலர் நாளிதழ் செய்தியை தொடர்ந்து அரசு பள்ளிகளின் பட்டதாரி ஆசிரியர்களுக்கான கட்டாய இடமாறுதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும்.

இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங் இம்மாதம் 15ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.ஒவ்வொரு அரசு பள்ளியிலும் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டு உள்ளது. அந்த எண்ணிக்கை அடிப்படையில் எத்தனை சதவீதம் ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என பள்ளிக்கல்வி துறை நிர்ணயம் செய்துள்ளது. இதன்படி மாணவர் விகிதத்தை விட அதிகமாக உள்ள ஆசிரியர்கள் உபரி ஆசிரியர்களாக கணக்கிடப்பட்டு உள்ளனர். இந்த உபரி ஆசிரியர்களை கட்டாய இடமாறுதல் செய்ய பள்ளிக்கல்வி செயலகம் உத்தரவிட்டது.இதன்படி முதற்கட்டமாக பட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்று கட்டாய இடமாறுதல் வழங்க ஏற்பாடுகள் நடந்தன.

அதாவது அரசு மேல்நிலை பள்ளிகளில் உபரியாக உள்ள முதுநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியை கூடுதலாக வழங்கி அந்த பள்ளியில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களை வேறு பள்ளிக்கு மாற்ற உத்தரவிடப்பட்டது.இந்த முடிவுக்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து நம் நாளிதழில் கடந்த வாரம் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து இன்று நடப்பதாக இருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான கட்டாய இடமாறுதல் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.அடுத்த அறிவிப்பு வரும் வரை பட்டதாரி ஆசிரியர்களை இடம் மாற்ற வேண்டாம் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பால் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment