இனி நீங்க கூடவே ஓட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்களை எடுத்துச் செல்ல தேவையில்லை.! தமிழக அரசு அறிவிப்பு

டிஜிட்டல் முறையில் ஆவணங்களை சேமித்து வைக்கும் மத்திய அரசின் டிஜிலாக்கர் செயலியை பயன்படுத்த அனைத்து துறைகளுக்கும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; டிஜிலாக்கரை ஏற்றுக்கொள்வதற்காக தமிழ்நாடு அரசு துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், சட்டப்பூர்வ அதிகாரிகள், தன்னாட்சி அமைப்புகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆதரவை வழங்க வேண்டும். இது மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் முதன்மை முயற்சியாகும். இது காகிதமில்லா நிர்வாகத்தின் பார்வையை ஊக்குவிக்கிறது.

இந்த அமைப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் டிஜிட்டல் பாதுகாப்பை வழங்குகிறது. இதன் மூலம் அனைத்து ஆவணங்களும் ஒரே இடத்தில் மின்னணு முறையில் சேமித்து வைத்து கொள்ளலாம் மற்றும் எப்போது வேண்டுமானாலும் அதை பயன்படுத்தி கொள்ளலாம். டிஜிலாக்கர் அமைப்பில் உள்ள ஆவணங்கள் அசல் ஆவணங்களுக்கு இணையாகக் கருதப்படுகின்றன என்று தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் நீரஜ் மிட்டல் வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ளார்.

மேலும் டிஜிலாக்கர் அமைப்பைச் செயல்படுத்த, அனைத்து அரசுத் துறைகளும் எதிர்கால மென்பொருள் பயன்பாடுகளை டிஜிலாக்கர் உடன் ஒருங்கிணைத்து, தேவைக்கேற்ப தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். சான்றிதழ்களை வழங்குவதற்கும், சரிபார்ப்பதற்கும் டிஜிலாக்கருடன் தற்போதைய மென்பொருள் பயன்பாடுகளை ஒருங்கிணைத்து, ஏற்கனவே வழங்கப்பட்ட மற்றும் எதிர்காலத்தில் வழங்கப்பட உள்ள அனைத்து சான்றிதழ்களும் டிஜிலாக்கர் பிளாட்ஃபார்மில் கிடைப்பதை உறுதிசெய்யுமாறு அனைத்து துறைகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் ஐடி, சான்றிதழ்கள் அல்லது மதிப்பெண் சான்றிதழ் ரேஷன் கார்டு போன்றவை நேரடியாக மக்களின் டிஜிலாக்கர் கணக்கில் சேமித்து வைத்து கொள்ளலாம். ஒருவேளை நீங்கள் வெளியில் எங்காவது பயணம் மேற்கொண்டால் நீங்கள் அசல் ஆவணம் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் மொபைல் போனில் சேமித்து வைத்த ரேஷன் கார்டு, லைசன்ஸ் போன்ற ஆவணங்களை காட்டினால் போதுமானது.

No comments:

Post a Comment