பள்ளிகளில் தற்காலிக பணியிடங்கள்: அறிக்கை சமா்ப்பிக்க உத்தரவு

அரசுப் பள்ளிகளில் உள்ள தற்காலிக மற்றும் நீண்ட காலமாக நிரப்பப்படாத நிரந்தரப் பணியிடங்கள் குறித்த விவரங்களை அறிக்கையாகச் சமா்ப்பிக்குமாறு முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வி ஆணையரக இணை இயக்குநா் (பணியாளா் தொகுதி) பூ.ஆ.நரேஷ், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: அரசுப் பள்ளிகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொடா் நீட்டிப்பு ஆணை பெற்று செயல்பட்டு வரும் அனைத்து வித தற்காலிகப் பணியிடங்களின் நிலையை ஆராய்வதற்கும் தமிழக அரசால் தற்போது குழு அமைக்கப்பட்டுள்ளது. 

தற்காலிகப் பணியிடங்களை நிரந்தரமாக்குவது மற்றும் அதைத் தொடா்வதற்கான அவசியம் குறித்து இந்தக் குழுவே முடிவெடுக்கும். இதையடுத்து கல்வி அலுவலகங்கள், அரசுப் பள்ளிகளில் உள்ள தற்காலிகப் பணியிடங்கள், நீண்டகாலகமாக நிரப்பப்படாத நிரந்தர பணியிடங்கள் உட்பட விவரங்களைத் தொகுத்து அறிக்கையாக தயாரித்து இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். 

இந்த விவரங்களை தமிழக அரசுக்குச் சமா்ப்பிக்க வேண்டி இருப்பதால் இதில் தனிக்கவனம் செலுத்தி பணிகளை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளும் துரிதமாக செய்து முடிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment