அமைச்சர் பொன்முடி பேச்சில் உடன்பாடு; 'டெட்' தேர்ச்சியாளர்கள் போராட்டம் வாபஸ்

அமைச்சர் பொன்முடி உறுதி அளித்ததை அடுத்து, சென்னையில் காலவரையின்றி உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்ற பட்டதாரிகள், போராட்டத்தை கைவிட்டனர்.தமிழகத்தில், 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், தங்களுக்கு போட்டித் தேர்வின்றி, ஆசிரியர் பணி வழங்கக் கோரி, சென்னை டி.பி.ஐ., வளாகத்தில், நான்கு நாட்களாக உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.அவர்களை, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உட்பட பல்வேறு கட்சி தலைவர்கள் சந்தித்து, ஆதரவு தெரிவித்தனர்.

அவர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என, அரசை வலியுறுத்தினர்.நேற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேச்சு நடத்தினார். அவர் அளித்த உறுதியை ஏற்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். 

இதுகுறித்து, அமைச்சர் பொன்முடி அளித்த பேட்டி:

பள்ளி ஆசிரியர்கள் பணியில், 9,000 பேரை நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அந்தப் பதவிகளுக்கு, ஏற்கனவே 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, நுழைவுத் தேர்வு நடத்தாமல், மூப்பு அடிப்படையில், ஆசிரியர்களாக பணி நியமனம் செய்யக் கோரி, ஒரு வாரமாக ஆசிரியர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ஊரில் இல்லாததால், முதல்வர் என்னை அழைத்து பேச உத்தரவிட்டார்.

அதை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் பேசினேன்.'நுழைவுத் தேர்வு கூடாது. டெட் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும். வயது தளர்வை அதிகரிக்க வேண்டும்' என, அவர்கள் கோரினர். இது தொடர்பாக சட்ட வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து, ஒரு வாரம் அல்லது 10 நாளில் முடிவு அறிவிக்கப்படும் என தெரிவித்தேன்.

அதை அவர்கள் ஏற்றனர்.சென்னை பல்கலையில், மூன்று முதுநிலை படிப்புகள் நிறுத்தப்படவில்லை.உயர் கல்வியை உயர்த்த கூடுதல் படிப்புகளை, முதல்வர் அளித்து வருகிறார். அனைத்து பல்கலையிலும், ஒரே மாதிரியான படிப்பு, ஒரே மாதிரியான கட்டணம், ஒரே மாதிரியான சம்பளம் விரைவில் அறிவிக்கப்படும்.

முதல்வரின் திராவிட மாடல் ஆட்சி, கர்நாடகாவில் பிரதிபலித்துள்ளது. வரும் லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலில், நாடு முழுதும் பிரதிபலிக்கும். தேசிய கல்விக் கொள்கையை புகுத்தமாட்டோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment